• ஆறு வயதோ அறுபது வயதோ

     #


    நிதர்சனம் பேசுவதற்கு 

    இங்கு நேரமில்லை

    ஆறு வயதோ அறுபது வயதோ

    காரணம் இருக்கத்தான் செய்கிறது.


    பிடித்த உணவு வாங்கி தரவில்லை என்று

    ஆறு வயது சிறுவன் 

    பிடித்த விளையாட்டு விளையாட விடவில்லை என்று 

    பன்னிரண்டு வயது சிறுவன், 

    பிடித்த ஆடை அணிய விடவில்லை என்று 

    பதினான்கு வயது சிறுமி,

    பிடித்த இருசக்கர வாகனம் வாங்கி 

    தரவில்லை என்று

    பதினாறு வயது மாணவன், 

    பிடித்ததை செய்ய விடவில்லை என்று 

    பதினெட்டு வயது மாணவி ,

    பிறந்து இரண்டு நாள்களே ஆன குழந்தை 

    இறந்ததில் இருந்து மீள முடியவில்லை என்று 

    இருபத்தி நான்கு வயது இளம்பெண், 

    படித்த படிப்பிற்கு வேலை இல்லை என்று 

    பாதி வாழ்க்கைக் கூட வாழாத இளம் ஆண், 

    உடல் பருமன் பற்றி 

    ஓயாது கேள்வி எழுப்பும் 

    கூடத்தில் சிக்கி தவிக்கும் பலர்,

    திருமணத்திற்கு சாதி தடை என்பதால் 

    எதிர்ப்புகள் சமாளிக்க முடியாத காதல் ஜோடி,

    உனக்கும் எனக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது

    நீ வேறு நான் வேறு என 

    சாதிய வன்கொடுமைக்கு ஆளான பலர்.


    பிறப்பு எதற்கு என

    வாழ்க்கையின் மீது பிடிப்பு இல்லை என்று 

    முப்பது வயது இளைஞன்,

    வரதட்சணை கொடுத்தும் போதவில்லை 

    என்று சொல்லி வாழும் வாழ்க்கை 

    நரகத்தில் இருக்கும் பல பெண்கள்,

    வாழ்க்கை இனி எங்கே கொடுக்க போகிறது 

    குழந்தை இல்லாத விரக்தியில் பெண், 

    மனைவியின் பிரிவை ஏற்க மனம் இல்லாத 

    நடுவயது ஆண்,

    மகள் வேறு சாதியில் 

    திருமணம் செய்து கொண்டாள் என்று 

    சாதியை உயர்த்தி பிடிக்கும் தம்பதி, 

    கடன் கழுத்தை நெறிக்க 

    இனி இந்த கடன் தேவை இல்லை என்று 

    தன் குழந்தைகள் தான் என்றுகூட

    பாரபட்சம் பார்க்காத குடும்பம்,

    முதுமையில் எதற்கு பாரம் என்றும் 

    முதுமையில் மரியாதை கேட்டு பெரும் 

    வாழ்க்கை எதற்கு என்று முதியவர்கள்.


    இப்படி ஆறில் இருந்து அறுபது வரை 

    பக்குவம் இல்லாத பலர் தொடங்கி 

    பக்குவமாக வாழ்க்கை வாழ்ந்த பலர் வரை 

    போதும் இந்த வாழ்க்கை 

    என்ற முடிவிற்கு தள்ளும் சமூகம் 

    ஒருபோதும் பேசியதில்லை இவற்றை.

    தற்கொலை எதற்கும் தீர்வு இல்லை 

    என்று சொல்லும் அவர்கள் 

    எண்ணத்தின் சமநிலை உடையும் போது 

    எங்கு இருந்தார்கள் ? 


    தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்த 

    ஒருவரிடம் எப்போதாவது 

    உரையாடி இருக்கிறீர்களா ? 

    அவர்களின் உளவியல் நிலை 

    எப்படி இருந்தது என விசாரித்தது உண்டா ? 

    அவர்களின் நட்பு வட்டாரம் எப்படி இருக்கிறது 

    அவர்கள் எப்படி இதை  எடுத்துக் கொண்டார்கள் ? 

    அவர்கள் மீண்டு விட்டார்களா ? 

    மீள உதவி வேண்டுமா ? 

    என கேட்டது உண்டா ? 

    அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது உண்டா ? 

    அவர்களின் உணர்வுகள் புரிந்துக் கொண்டுதது  உண்டா ? 


    வெறும் வார்த்தைகள் அடங்கிய போலி 

    நம்பிக்கை சமூக 

    வலைதளங்களில் உதிர்த்து விட்டு 

    கடந்து செல்லும் உங்களுக்கு 

    அவர்கள் எப்படி போனால் என்ன 

    வெறும் வார்த்தை என்று ஏளனமாக 

    கூட சொல்ல முடியாது 

    வெறும் வார்த்தைகளே இங்கே பலரை 

    தற்கொலைக்கு தள்ளுகிறது. 


    தற்கொலை எண்ணத்தில் இருக்கும்

    ஒருவர் இப்படி தான் இருப்பார் 

    என்று எந்த வரையறுக்கப்பட்ட  நிலையும் இல்லை 

    ஒரு சொல், சிறு அவமானம், கோபம், 

    பிரிவு, இழப்பு  என மனப்பிறழ்வில் இருக்கும் 

    அவர்களுக்கு எப்போது வேண்டும் என்றால் 

    எண்ணம் பிறழ்லும் மனம் தளரும்

    முடிவுகள் மாறும் முடிவுகள் தேடும்.


    இங்கே உணர்வுகள் பக்குவமாக கையாளப்படுவதும் இல்லை 

    உணர்வுகளை பக்குவப்படுத்த யாரும் 

    முன்வருவதும் இல்லை

    உளவியல் மாற்றங்கள் கண்களுக்கு தெரியாது 

    உளவியலால் நிகழும் மாற்றங்கள் 

    கண்களுக்கு தெரியும்,

    பக்குவமான மனங்கள் கேட்பது பெரிதாக ஒன்றும் இல்லை 

    சிறு உரையாடல், கொஞ்சம் அன்பும் 

    அரவணைப்பும் தான் 

    கொஞ்சம் செவி கொடுத்து கேட்க ஒரு 

    அன்பு நிறைந்த உள்ளம்.


    எல்லோருக்கும் ஒரு காரணம் இருக்கும்

    சிறு குழந்தையின் காரணம் சிறுமையாக தான் இருக்கும் 

    சிறு குழந்தைக்கு இல்லை,

    இங்கே பக்குவப்பட்ட பெற்றோர்கள் தேவை,

    காரணங்களில் சிறுமை என்று எதுவும் இல்லை.


    வருடத்தில் ஒரு நாள் 

    வருடத்தில் ஒரு மாதம் 

    விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு 

    மீதம் உள்ள நாள்களில் மாதங்களில் 

    தற்கொலை நிகழ்வதில்லையா ? 


    தற்கொலைக்கு முயலும், முயன்ற நபர்களுக்கு 

    உளவியல் ஆலோசனை தரும் நீங்கள்

    எப்போது தற்கொலைக்கு தள்ளும் 

    சமூகத்திற்கு உளவியல் ஆலோசனை தருவீர்கள் ? 

    எப்போது சீர்திருத்தம் செய்வீர்கள் ? 

    இன்னும் எத்தனை உயிர்களை 

    இந்த சமூகம் பலி கேட்கும் 

    தற்கொலையின் பெயரில்.


    தற்கொலைக்கு முயன்று உயிர்பிழைத்த 

    எல்லோரும் மீண்டும் வாழப்போவது 

    அதே சமூகத்தில் தான்

    மாற்றங்கள் ?



0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக