• பிணங்களே அரசியல் பழகு




     பிணங்களே அரசியல் பழகு


    உயிர் உள்ள மனிதனுக்கு மதிப்பு 

    குறைந்து கொண்டே போகிறது 

    இறந்தவர்களுக்கு தான் மதிப்பு 

    என அரசியல் ஆகிவிட்டது.


    இயற்கையான மரணத்தில் 

    எதுவும் பெரிதாக அரசியல் நிகழவில்லை 

    இயற்கைக்கு எதிரான கொலை, விபத்து தான் 

    இங்கே பிரதானம் 

    எப்படி இறந்தார்கள் 

    யார் அவர்கள் ? 

    அவர்கள் மதம் சாதி தெரிந்த 

    பிறகு தான் அரசியல் நிகழ்கிறது.



    ஒரு தலித் ஆணவக்கொலை செய்யப்பட்ட 

    அடுத்த நாளே ஊடகங்களில் பேசுபொருள் ஆகிறது

    அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க 

    இங்கே அரசியல் களம் சூடுபிடிக்கும் 

    அதே வேளையில்  வேறு ஒரு சமூகம் 

    அதே சமூகத்தில் காதல் திருமணம் செய்த 

    அவர்களை கொன்று இருக்கிறது 

    இந்த ஆணவக்கொலை பேசு பொருள் இல்லை

    ஆணவக்கொலைக்கு இங்கு பாரபட்சம் பார்க்கிறது அரசியல் 

    எதை அரசியல் ஆக்கப்பட வேண்டும் 

    என்ற கோட்பாடுகள் அரசியல் வரையறுக்கும் 

    ஆனால் ஒருபோதும்

    ஆணவக்கொலை தடுக்க முற்படாது

    நீங்கள் வெறும் பிணங்களே. 


    அதோ அங்கே ஒரு பழங்குடி நபர் 

    அடித்து கொலை செய்யப்படுகிறான் 

    அது‌ அரசியல் பேசுபொருள்

    அதே வேளையில் இரண்டு உயிர்களை 

    மலக்குழி காவு வாங்கியது

    அதை சிலர் பேசுகிறார்கள்

    அவர்கள் குரல் யாருக்கும் கேட்கவில்லை

    எது அரசியலுக்கு தேவையோ அது அரசியல் ஆகும்

    நீங்கள் வெறும் பிணங்களே. 


    அரசியல் பக்குவம் இல்லாத கூட்டம் 

    அரசியல் செய்த போது 

    ஒரு நடிகர் வருகைக்கு 

    காத்து இருந்த கூட்டம் மாய்ந்த போதும் 

    அவர்கள் இதில் எனக்கு எந்த பொறுப்பும் இல்லை 

    என பொறுப்பு துறந்து 

    நாற்பது பிணங்களுக்கு முன் 

    அரசியல் நாடகம் நடத்திய போது

    பிணங்களின் அரசியல் விஸ்வரூபம் எடுத்தது

    இழந்த உயிர்களின் உறவுகள் 

    கதறி அழும் சத்தம் 

    அரசியல் சாத்தான்களுக்கு கேட்கவில்லை 

    நீங்கள் வெறும் பிணங்களே. 


    வரதட்சணை கொடுமையில் இறந்த 

    பெரும் பணக்காரனின் பெண் ,

    அந்த இறப்பை

    ஆச்சரியமாக பேசும் உலகம் 

    அதை அரசியலாக பேசிக்கொண்டு இருக்கும்போதே 

    ஆங்காங்கே நூறு பெண்கள் வரதட்சணையில் 

    இறந்து கொண்டு இருக்க 

    எதுவும் நிகழாதது போல் 

    மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் உலகம் 

    நீங்கள் வெறும் பிணங்களே.



    அலட்சியம் பொறுப்பின்மை கையாளத் தெரியாத ஆளுமை 

    அரசு பல உயிர்களைக் கொன்று குவித்த போது

    இறந்தவர்களின் உடன் இருப்பவர் நிலையறியாத 

    அரசியல் கூட்டத்திற்கு 

    கிடைத்து இருப்பது  பிணங்கள் 

    பிணங்களே முதல் கேடயம் 

    பிணங்களே முதல் யுக்தி 

    பின் சில கதைகள் 

    பின் சில நாள்கள் 

    அனைத்தும் காணாமல் போகிறது 

    நீங்கள் வெறும் பிணங்களே.


    பிணங்களே அரசியல் பழகி கொள்ளுங்கள் 

    அலட்சியம், பொறுப்பின்மை, கையாளத் தெரியாத ஆளுமை,

    வாக்கு வங்கி , சாதி பின்னணி , முதலாளித்துவம் 

    என பல விடயம் இருக்கும் 

    உங்களுக்காக நிகழும் அரசியலுக்கு 

    பிணங்கள் ஆகிய நீங்களே காரணம் 

    பிணங்கள் ஆகிய நீங்களே மூலதனம் 

    உங்களுடன் இருக்கும் 

    உங்களை நம்பி இருந்தவர்களுக்கும்

    இந்த அரசியலில் பங்கு இருக்கும் 

    கொஞ்சம் விழிப்புடன் இருங்கள் 

    நாளைய பிணங்களே.




0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக