• பண்டிகைகள் ஒருபோதும் சமத்துவத்தை கொடுப்பதில்லை

     







    பண்டிகைகள் ஒருபோதும் சமத்துவத்தை கொடுப்பதில்லை 
    பண்டிகை ஒரு வித முதலாளித்துவத்தையும்  
    ஆதிக்க தோரணை மட்டுமே கொடுக்கிறது. 

    தீபாவளி பண்டிகையை 
    வெடி வெடித்துக் கொண்டாடாதீர்கள் 
    என ஒருவர் சொல்லும் போது 
    அதற்கு பதிலாக வருகிறது
    ஒரு நாள் தான் என்ன ஆகிவிடப் போகிறது ?  

    ஒரு நாள் தான் கொண்டாடுகிறோம் 
    இதனால் வெடி உற்பத்தி செய்பவர்களுக்கு 
    நாம் செய்யும் கைமாறு 
    என பெருமையாக சொல்கிறார்கள் 
    இதில் என்ன பெருமை இருக்கிறது 
    இதில் ஒரு முதலாளித்துவம் மட்டுமே நிறைந்திருக்கிறது 
    ஒரு நாள் தான் வாங்குகிறோம் என்றால் 
    ஏன் வருடம் முழுதும் உற்பத்தி செய்கிறார்கள் 
    தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பு 
    உற்பத்தி செய்தால் போதுமே 
    அது வணிகம், தொழில் 
    அது இயங்கிகொண்டு தான் இருக்கும் 
    அவர்கள் வாழ்வாதாரம் இயங்கிக் கொண்டுதான் இருக்கும் 
    ஆனால் இவர்கள் சொல்லும் 
    ஒரு நாள் அவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கப் போவதில்லை 

    என்றாவது அந்த ஒரு நாள் 
    அவர்கள் ஊதிய உயர்வுக்காக போராடிய போது 
    இவர்கள் எங்கு சென்றார்கள்  ?

    இத்தனை நாள்கள் 
    இவர்கள் சரியான பாதுகாப்பு 
    உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்த போது 
    இவர்கள் எங்கு சென்றார்கள் ?

    அந்த ஒரு நாள் தொழிற்சாலை 
    வெடித்து சிதறி தொழிலாளர்கள் இறந்த போது 
    இவர்கள் எங்கு சென்றார்கள் ? 

    தொழிற்சாலை ஊழியர்களுக்கு 
    முறையான இழப்பீடு வழங்காத போது 
    இவர்கள் எங்கு சென்றார்கள்? 
    தொழிற்சாலை வெடித்தது  விபத்து 
    என சொல்லி காப்பீட்டுத் தொகை 
    பெற்றுக் கொண்ட முதலாளி   
    அதில் ஏதேனும் ஒரு தொகையை 
    ஊழியர்களுக்கு கொடுத்ததாக தகவல் ஏதேனும் உண்டா ? 
    அப்போது இவர்கள் எங்கு சென்றார்கள் ? 

    இங்கே மறைமுகமாக  
    இவர்களால் சொல்லப்படுவது 
    பெரும் முதலாளித்துவம் மட்டுமே. 

    ஒரு நாள் தான் என்ன ஆகிவிடப் போகிறது ?  
    அந்த ஒரு நாள் தான் 
    இந்த பூமியை  சுத்தமற்ற 
    காற்றை சுவாசிக்க வைக்கிறது 
    அதில் சுவாச பிரச்சனை உள்ள 
    எத்தனை நபர்கள் பாதிக்கப்படுகிறார்கள் 
    ஒரு நாள் தான் என்பதற்காக 
    அத்தனை உயிர்களையும் கொன்று விடுவது தான் பண்டிகையா ? 

    அந்த ஒரு நாள் தான் காற்று மாசு  
    அதில் ஏற்படும் புகை மூட்டத்தில் 
    விபத்துக்குள் சிக்கி உயிரிழந்தவர்களை பற்றி 
    என்றாவது இவர்கள் கவலை கொண்டது உண்டா  ? 
    இங்கே பண்டிகைகளில் மிஞ்சுவது சுயநலம் மட்டுமே. 

    அந்த ஒரு நாள் தான் 
    என திமிராக சொல்லிவிட்டு 
    பெரும் ஒலிபெருக்கிகள் கொண்டு 
    பாடல்கள் ஒலிக்கப்பட்டு 
    மற்றவர் தூக்கத்தை கெடுத்து 
    மற்றவர்கள் உடல்நிலை கருத்தில் கொள்ளாமல் 
    அதிக ஒலி எழுப்பி பலருக்கும் 
    இன்னல்கள் கொடுத்து 
    ஒரு சிலர் கொண்டாடுகிறார்கள் 
    அந்த ஒரு நாளில் யாரேனும் ஒருவருக்கு
    மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்வார்கள் ? 

    அந்த ஒரு நாள் தான் எனச் சொல்லி
    எத்தனையோ உயிர்கள் வெடி 
    ஒலி சத்தத்தை தாங்க முடியாமல் 
    அலறி துடித்து, சிதைந்து ஒளிந்து கொண்ட போது 
    இவர்களுக்கு அந்த ஒரு நாள் 
    பெரிதாக மகிழ்ச்சியாக இருக்கிறது
    ஆனால் அந்த உயிரினங்களுக்கு ஒரு நாள் நரகமாக தெரிகிறது.

    இங்கே பண்டிகைகள் 
    எதற்கு கொண்டாடுகிறோம் 
    யார் கொண்டாடுகிறார்கள் 
    என்பதை கடந்து கொண்டாட வேண்டும் என்ற மனநிலை 
    எப்படி கொண்டாட வேண்டும் 
    என்பது பலருக்கும் புரியவில்லை சுயநலமாக கொண்டாடுகிறார்கள். 

    பண்டிகைகள் ஒருபோதும் சமத்துவத்தை  
    கொடுப்பதில்லை என்றால் 
    மக்கள் எல்லோரும் சமமாக நடத்தப்பட்டு 
    சமமாக கொண்டாடுகிறார்கள் என்பதை மட்டும் குறிப்பதல்ல 
    இயற்கை சார்ந்தும் சமத்துவமாக கொண்டாடப்படுவது பண்டிகை.



0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக