• மனிதநேயத்தை கொன்ற நோய்




    மனிதநேயத்தை கொன்ற நோய்



    அந்த பயலுக எல்லாரையும் சுட்டு தள்ளனும் அப்போ தான் நமக்கு நோய் வராது. எழவு இவனுக ஊரு மேஞ்சிட்டு இங்க வந்து நோய் பரப்புரானுங்க  துலுக்கனுங்க.



    என்ன அண்ணே இப்படி சொல்லுரிங்க...

    ஆமா  இவனுங்க தான்  எச்சி துப்பி பரப்புரானுங்க அது மட்டுமா இந்து மக்கள் எல்லாரையும் கொள்ள தான் இந்த பிளான், இது மட்டுமா இந்த கீழ் சாதி பயல்கலும் தான் இத வேணும்னு பரப்புரானுங்க  அவனுங்களுக்கு நம்ம மேல பொறாமை தம்பி.

    என்ன நீ வெவரம் தெரியாத பயலா இருக்குற. வாட்சப் எல்லாம் பாக்க மாட்டியா. இரு உன்ன நம்ம குரூப்புல சேத்து விடுறேன்.

    இப்படி தான் இந்த நோய்க்கு புதிய பெயர்கள்  கண்டுபிடிக்கப்பட்டது. இங்கே அந்த நோய்களை விட பெரிய நோய் பல வருடங்களாக பரவி கொண்டுதான்  இருக்கிறது. அது தான் மதவெறி. எங்கெல்லாம் மனிதநேயம் கொல்லப்படுகிறதோ அங்கு எல்லாம் சாதி, மதம் , சுயநலம், அதிகாரம்  மூலக் காரணமாக இருக்கிறது.  

    எங்கள் சாதிக்கு எந்த நோயும் வராது என திமிராய் பேசும் ஒரு கூட்டம். எங்க மதம் புனித மதம் அதனால்தான் எங்க மக்களை நோய் தாக்காது,பாவம் செய்தவரை மட்டும் தான் நோய் தாக்கும். இந்த நோய் பாவம் செய்த மக்களுக்கு ஒரு தண்டனை. இங்கே ஒரு உயிரின் மதிப்பை எளிதில் இடை போட்டு விட்டார்கள்.    

    முதலில் நோயின் காரணம், உருவான இடம், எங்கு எதனால் என்பதை பார்க்கவில்லை சிலருக்கு வன்மத்தை கக்கி கொண்டே இருக்கவேண்டும், அதில் என்ன அப்படி ஒரு ஆனந்தம் என்று தெரியவில்லை. நோயின் தீவிரம் புரியவில்லை. நோய் பற்றியும் தெரியவில்லை ஆனால் தன் மதம் சாதி சார்ந்த பெருமை மற்றவர்களை வெறுப்பு உணர்வோடு அணுகுதல் துளி அளவும் குறையவில்லை இது ஒரு மனநோய்.

    காலம் தாழ்த்தி தான் இங்கு ஊரடங்கு போடப்பட்டது ஆனால் மக்களுக்கு கொடுக்கப்பட்ட அவகாசம் வெறும் 4 மணி நேரம் தான். பல நூறு கிலோமீட்டர் நடக்கும் மக்களை பார்த்து ஒரு கூட்டம் கேட்கிறது 'எங்க சாவுறதுக்கு கூட்டம் கூட்டமா கிளம்பிட்டானுங்க ' அந்த மக்களை தன் சுயநலத்திர்க்காகவும், அதிக லாபம் வேண்டும் என்பதற்கும் குறைந்த ஊதியம், மூன்று வேலை உணவு அதுவும் சில இடங்களில் இல்லை ஒரு அடிமை போல நடத்தி கொண்டு இருந்த முதலாளி கூட்டம் உன்னால் எனக்கு நோய் வரும் நீ இடத்த காலி பண்ணு என்று சொன்னால் அந்த கூட்டம் எங்கே போவார்கள். அதுவும் பலநூறு கிலோமீட்டர்கள் நடந்த மக்கள் மீது கிருமி நாசினி என்று வேதிப்பொருள்கள் கொண்ட நீரை பீச்சி அடிக்க எப்படி மனசு வந்தது. இதனால் அவர்கள் இறக்க கூடும் என்று தெரியாதா? இவர்கள் வாழ்வாதாரம் பற்றி யார் யோசித்தார்கள். ஒரு மாதம் வேலை இல்லை என்றால் தினக்கூலி செல்பவர்களுக்கு பணம் எப்படி கிடைக்கும் ? உயர்தர மற்றும் உயர் நடுத்தர மக்களுக்கு மட்டும் சலுகை கொடுத்து விட்டு ஏழைக்கு என்ன கொடுத்தார்கள். நட்பு ரீதியல் மனிதநேய அடிப்படையில் மற்ற நாடுகளுக்கு உதவும் அரசு ஏன் தன் நாட்டு மக்களுக்கு  இந்த நிலையை உருவாக்கியது. மக்களிடம் இருந்து நிதி திரட்டி மக்களுக்கு உதவி செய்வோம்  என்று சொல்லும் அரசு எப்படி மக்களை காப்பாற்றும். இதிலும் அரசியல் எதிலும் அரசியில் என்றால் மக்கள் நிலை தான் இங்கு கேள்விக்குறி.  மக்கள் வெறும் வாக்கு வங்கி தான் போல தேர்தல் வந்தால் தான் மக்கள் மீது அக்கறையும் பாசமும் நிறைந்து இருக்கும்.  
            
    எங்கே சென்றது மனிதநேயம். வெறும் புத்தங்களில் மட்டும் தானா இல்லை மேடை பேச்சுகளில் மட்டும் தானா. கை தட்டுங்கள் என்றார் கூட்டம் கூட்டமாக தெருக்களில் நோய் பரப்ப சென்றார்கள் எதற்கு என்று கேட்டால் நாம் இதை நமக்காக போராடும் மருத்துவர் , தூய்மை பணியாளர்களுக்கு  கொடுக்கும் மரியாதை மற்றும் நன்றி கடன் என்றான். அடுத்த வாரமே மருத்துவர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது காரணம் போதிய பாதுகாப்பு சாதனங்கள் இல்லை. அதற்க்கு அடுத்த வாரம் இறந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய மறுத்த மக்கள் என்ற செய்தி எங்கே போனது நன்றி விசுவாசம் மனிதநேயம் எல்லாம். ஒரே வாரத்தில் மழுங்கி விட்டதா ?

    தூய்மை பணியாளர்கள் அவர்களுக்கு கிடைக்கும் மரியாதை மருத்துவர்களை காட்டிலும் ஒரு படி மேல். சாதி வன்மத்தோடு அவர்களை நடத்துவது ஒரு நாள் கை தட்டி நன்றி சொன்னால் எல்லாம் மாறிவிடுமா ? நோய் தொற்று இல்லை என்றால்  பாதுகாப்பு சாதனங்கள் எதுவும் கிடையாது,  பாதாள சாக்கடையில் இறப்பவர்கள் பற்றி அவர்களுக்கு எங்கு தெரிய போகிறது. ஒரு நாளில் தன்னை புனிதனாக காட்டிக் கொள்வதில் ஒரு பெருமை போல.

    இந்த மனிதநேயமற்ற மக்களை வன்மத்தோடு குறை சொல்லவில்லை ஒரு ஆதங்கம் ஒரு சிறு துளி மனிதநேயம் மட்டுமே எதிர்பார்கிறேன். மாற்றம் தனிமனிதனிடம் இருந்து தான் துவங்கிறது. ஒருவரை அவரின் நிலையில் இருந்து பார்க்கும் போது தான் இங்கு எல்லாம் மாறும் நீங்கள் காட்டும் கரிசனம் ஒரு போதும் உதவாது.

    ஒருவரின் நிலையை எடுத்து சொல்லி அரசை கேள்வி கேட்டால் அவர்கள் அரசின் எதிரி போல் சித்தரிக்கப் படுகிறார்கள். இங்கே நோயயை விட மனிதநேயம்  இல்லாத காரணத்தால் தான் பலர் இறகின்றனர்.

    நோய் தொற்று உள்ள மக்களை வெறுப்போடு பார்க்கும் போது அவர்கள் எப்படி பட்ட மனஉளைச்சலுக்கு உள்ளாவார்கள் என்று ஏன் யாருக்கும் புரியவில்லை. அவர்கள் செவிபட பேசினால் அவர்கள் உடன் இருப்பவர்களுக்கும் அது மனக்கஷ்டம் தான். வாழ்க்கையின் விழும்பில் நின்று கொண்டு சாவா வாழ்வா என்று போராடிக்கொண்டு இருக்கும் மக்களை வார்த்தைகளால் கொன்று விடவேண்டாம். அவர்கள் வலியை உணர நாமும் நோயாளியாக மாறினால் மட்டுமே முடியும். 

    இன்றும் ஓயாது நடக்கும் மதம்,சாதி சார்ந்த சண்டைகள் சமூகத்தில், சமூகவலைத்தளங்களில் என்று தான் மாறுமோ இந்த சமூகம் ? 

    மனிதன் பேசும் மனிதம் எங்கே ?   






                  

       

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக