• நீ ஏன் திருமணம் வேண்டாம் என்கிறாய் ?

    நீ ஏன் திருமணம் வேண்டாம் என்கிறாய் ? 



    திருமணம் என்பது தனி நபரின் விருப்பமே, இன்று வேண்டாம் என்று சொல்பவர்கள் சில வருடங்களுக்கு பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால் அதை தீர்மானிக்கும் உரிமை அவர்களுடையது. சமூக கட்டமைப்பு என்று சொல்லி ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நிர்பந்திப்பது எந்த விதத்திலும் சரி இல்லை. எந்த விதத்திலும் என்பது எல்லா விதத்திலும் தான். உங்கள் கேள்விகளுக்கு விடைகள் அவர்களிடம் இருக்கும். இதோ சில கேள்விகள் 


    துணை இல்லாமல் எப்படி வாழ்வாய்? 

    எப்படியோ வாழ்ந்து விட்டு போகிறேன் அதில் உங்களுக்கு என்ன சிக்கல். அதை நான் திட்டமிட்டு வைத்து இருக்கிறேன். 


    உன் கடைசி காலத்தில் ஒரு துணை இருந்தால் பார்த்து கொள்வார்கள் அல்லவா ? 


    கடைசி காலத்தில் நோயுற்று இருத்தால் அப்போது பார்த்து கொள்ள ஒருவர் தேவைபட்டால் ஒரு நர்ஸ் அல்லது care taker வைத்து கொள்வேன். இதற்காக ஒருவரை ஆயுள் முழுவதும் துணை என்ற உறவின் பெயரில் வைத்து அவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுக்க விருப்பம் இல்லை.


    உனக்கு என்று ஒரு துணை ஒரு குழந்தை இருந்தால் உனக்கு கொல்லி வைக்க உதவும் உன் வம்சம் தொடரும் அதற்காகவாது …. 


    இந்த உலகில் ஒரு குழந்தை பெற்று அந்த உயிரையும் துன்பத்தில் சிக்க வைப்பது அதாவது இந்த வன்மம் நிறைந்த சமூகத்தில் சிக்கி சிதைந்து போவதை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு கொல்லி வைக்க தான் ஓர் உயிர் பிறக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.   

    அதே போல் என்ன பெரிய வம்சம் அதுவும் ஆண் பிள்ளை பெற்றால் தான் வாரிசு பெண் பிள்ளை பெற்றால் கணக்கில் வராது என்று சொல்வீர்கள்.

    ஒரு ஆண் பிள்ளைக்காக நான்கு ஐந்து பெண் பிள்ளை பெற்றவர்கள் கதைகளும் எனக்கு தெரியும். 


    இப்படி உங்கள் கேள்விகள் ஏதுவாயினும் என்னிடமே பதில் இருக்கும். 


    துணை என்பது வெறும் பணம் ஈட்டும் ஒருவராக , வீட்டு வேலை செய்யும் ஒருவராக , பிள்ளைகள் வளர்க்கும் ஒருவராக , மாமியார் மாமனார் பணிவிடை செய்யும் ஒருவராக , ஆசைகள் இன்றி ஓடும் ஒருவராக வாழும் சிறைக் கைதியாக பார்க்க இயலாது.  


    திருமணம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்று சொல்ல இயலாது. மூன்று பிள்ளைகள் இருக்கும் ஒரு வீட்டில் மூத்த பெண் அல்லது ஆண் மற்றவர்களை திருமணம் செய்து வைக்க வாங்கிய கடனுடன் கடைசி வரை பயணிக்க வேண்டியது இருக்கும். 

     

    திருமண வாழ்க்கையில் வரும் சிக்கல்கள் , துணை என்ற கணவன் குடி, போதை ஆசாமியாக இருந்தால் ? , இளம் வயதில் துணை இழந்து single parent ஆக வாழ்வது கடினம்.  


    மறுமணம் செய்து கொள்ள எத்தனை நபர்கள் முன் வருகின்றனர் ? பெரிதும் இல்லை. அதுவும் ஒரு குழந்தை இருந்தால் வாய்ப்பே இல்லை. Single parent ஆக குழந்தை வளர்ப்பது என்பதே பெரிய பொறுப்பு.


    ஒருவர் தனக்கு பெரும் நோய் இருக்கிறது என்று தெரிந்த பின்பு எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும். தன் சுயநலத்திற்காக ஒருவர் வாழ்வை வீணடிப்பதற்கு எப்படி மனம் வரும். 


    சிலரோ தன் வேலை , படிப்புக்கு ஏற்ற துணை அமையவில்லை என்ற விரக்தியில் திருமணம் வேண்டாம் என்கிறார்கள். சிலர் பொருளாதர சுதந்திரத்திற்காக, தனிமனித சுதந்திரத்திற்காக வேண்டாம் என்கிறார்கள்.



    திருமணம் என்பது பெரும் பொறுப்பு சிலவற்றை மட்டும் முன்வைத்து சொன்னால் ஒருதலை பட்சம் மட்டுமே. திருமண பொறுப்புகள் கையாளும் பக்குவம் எல்லோருக்கும் இல்லை அதை ஒரு சுமையாக கூட இருக்கும்.


    துணை என்பது இது தான் இப்படி தான் என்று வரையறுக்க உங்களுக்கு உரிமை இல்லை. துணை என்ற பெயரில் கொத்தடிமையை தான் சிலர் தேடுகிறார்கள். 


    இதை எல்லாம் கடந்து ஒருவர் புரிதலுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தால் உங்கள் மத ,சாதி பற்று விடுவது இல்லை. 



    - மகிழினி








0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக