ஒரு ஓரமாய்
ஒட்டி இருக்கும்
வண்ண வண்ண பொட்டுகள்.
உலர்ந்த கோப்பையில்
நீண்ட நாட்களாக
உறங்கும் ஒரு டூத் ப்ரஷ்.
திறக்கப்படாத அலமாரியில்
அடுக்கி வைக்கப்பட்ட
அணிகலன்களும்
ஆடைகளும்.
தூசி படிந்த மேசையில்
மூக்குக் கண்ணாடியும்
கைகடிகாரமும்
பேனா விலக்கி வைத்த
பக்கங்களுடன் ஒரு டைரியும்
பாதி தீட்டப்பட்ட ஓவியமும்
உலர்ந்த வண்ணங்களும்
என எதுவும் மாறவில்லை
மாற்றபடவும் இல்லை
அவள் விட்டுச்சென்ற இடத்தில்
அவள் வாழ்வது போலவே
அப்படியே இருக்கிறது எல்லாம்
அவனும் வாழ்கிறான்.
அன்று அவளுடன் பார்த்த
தீ ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்
படத்தை சிலாகித்து
நிகழ்ந்த உரையாடல்கள்
நினைத்து ததும்பி அழுகிறான்
"நானும் இது போல் இறந்து போனால் "
என்ன செய்வாய்
என அவள் கேட்ட கேள்வியில் சிக்கிய அவன்,
அன்றைய நாள் கண்ணீரோடு தான்
இன்றும் மீள வாய்ப்பு இல்லை
அந்த கேள்வியில் இருந்து
அன்று மட்டும் இல்லை
அவள் விட்டுச்சென்ற நாள்
முதல் எல்லா நாளும்
கண்ணீரோடு தான் முடிகிறது.
அவளின் ஆடைகளில்
இன்றும் வீசுகிறது
அவள் பயன்படுத்திய
வாசனை திரவியங்களின்
நறுமணத்துடன்
அவளின் வாசமும்.
யாரோ ஒருவரின்
அலைப்பேசியில் ஒலிக்கும் ரிங்டோன்
அவள் முனுமுனுக்கும் பாடல்
என்றால் நாகர மறுக்கிறது
அவனின் மனம்
அவள் முனுமுனுக்கும் போது
எத்தனை முறை பரிகாசித்து
சிரித்து இருப்பான்
ஏன் இப்படி
என்னை பாடியே கொள்கிறாய்
என கேட்டுவிட்டு
ஒரு பௌர்ணமி இரவில்
நிலவை ரசித்து கொண்டே
ஒரு முறை எனக்காக
அந்த பாட்டை ப்பாடு
என அவன் மன்றாடி கேட்ட போது
அவள் ஒரு புன்னகை வீசி
அவனுக்காக பாடி பாடல் தான்
அவனை தினமும் தாலட்டுகிறது.
அவள் கடற்கரையில் கால்
பதித்து சேர்த்த சிப்பிகளில்
அவள் கை ரேகையின் சுவடுகள்
இன்றும் தெரிகிறது மீன் தொட்டியில்
அவள் வளர்த்த மீன்கள்
முத்தமிட்டு செல்லும் போது எல்லாம்
அவளுடன் அவன் கடல் அலையில்
கால் நனைத்து காதலாடிய பொழுதுகள்
இன்றும் கால்கள் நனைக்கிறது
கண்ணீரால்.
அவர்களின் சமையல் அறை
நிறைந்து இருந்தது
அவளின் காதலும்
அவனின் அறுசுவை சமையலும்
அவள் அவ்வப்போது வந்து
"உப்பு பத்தல...
காரம் பத்தல... "
என சொல்லும் போது
" இவ்வளவு சொல்லுறியே ஒரு நாள் நீ சமைச்சா என்ன "
என அவன் கேட்கும் போது
எல்லாம் அவள் சொல்லுவது
" உன்ன விட யாருடா இவ்வளவு
ருசியா சமைக்க முடியும் "
என பாராட்டி முத்தங்கள்
பரிசு அளிப்பாள்.
"இப்போ எல்லாம் நீ சரியா
பேசுறதே இல்ல "
என தொடங்கும் அவள் உரையாடல்
அவள் மட்டும் பேச தான்
எல்லாம் பேசி விட்டு
அடுத்த வேலை பார்க்க
கிளம்பி விடுவாள்
அவன் கதையாட ஒன்றும் இல்லை
அவனுக்கு நான்கு சுவற்றுக்குள்
அவளும் அவள் சார்ந்த விடயம்
மட்டும் தான்
அவனை அவன் ஹவுஸ் ஹஸ்பண்ட்
என சொல்வதில் ஒருபோதும்
சலித்து கொண்டது இல்லை.
ஆடை முதல் ஆப்பிள் மொபைல் வரை
அவள் வாங்கி தந்தது தான்
அவனுக்கு நான் வாங்கி தரமால்
யார் வாங்கித் தரணும் என
அவளும் பெருமையாய் சொல்லுவாள்
அவன் என் கணவன் என்று.
வாகனத்தில்
அவள் பின் அமர்ந்து செல்ல
அவன் ஒரு போதும் கூச்சமாக
நினைத்தது இல்லை
அவன் ஆலோசனை இல்லாமல்
அவள் எதுவும் வாங்கியது இல்லை
அவன் தானே எல்லாம் பின்
அவள் எப்படி அவனை தனித்து விடுவாள்
அவளின் உலகமும் அவன் தானே.
என் நோய்
என் குழந்தைகளுக்கும் அடுத்த
தலைமுறை கடந்து பின் தொடரும்
என அவன் சொன்ன போது
யார் என்ன சொல்லிவிட போகிறார்கள்
நம் வாழ்க்கை
நாம் தான் வாழப் போகிறோம்
நீயே என் குழந்தை
நாம் ஒரு குழந்தை
தத்து எடுத்துக் கொள்ளலாம்
என யதார்த்தமாய் சொன்ன போது
அவள் மடியில் முகம் பதித்து
அழும் குழந்தையாக அவன்,
அணைத்து அரவணைத்தது
அவள் தான்.
"டேய் நம்ம கல்யாணத்துக்கு
நாம தான் நமக்கு புடிச்ச மாதிரி
மோதிரம் எடுக்கணும்
யாருக்கோ புடிச்ச மோதிரம்
மாத்திகிட்டு சுத்த கூடாது
ஒழுங்கா நல்ல டிசைனா பாரு "
என சொல்லி மாற்றி கொண்ட
மோதிரம் தான்
இன்று அவன் இதையதின்
அருகில் துடித்து கொண்டு இருக்கிறது
அவளின் விரலுக்காக.
அவர்களின் அறை முழுவதும்
அவன் புகைப்படங்களால்
நிரப்பி இருப்பான்
அவர்களின் முக்கிய நிகழ்வுகள்
எல்லாம் புகைப்படமாகும் நேரம்
அவள் கேட்பாள்
"எதுக்கு டா இவளோ ஃபோட்டோ
எனக்கு என்ன ஞாபக மறதியா
நீ பயப்படாத
நான் உன்ன மறக்க மாட்டேன்
நம்பு, சும்மா ஃபோட்டோ
எல்லாம் வேணாம் "
என விளையாட்டாக சொல்லுவாள்
இன்று அவள் புகைப்படத்தில் மட்டுமே
அவனோடு இருக்கிறாள்.
எத்தனை வருட காதல்
என்பது முக்கியம் இல்லை
எப்படிப்பட்ட புரிதலோடு வாழ்கிறோம்
என்பது தானே காதல் கல்யாணம் வாழ்க்கை.
அவனுக்கு அவள் தானே எல்லாம்.
இப்படி எல்லாமுமாக
இருந்த அவள்
இன்று இல்லை
எனும் போதும்
அவன் அவனாக இல்லை
அவன் உடல் மட்டுமே உயிரோட்டத்தில்
அவன் மனமோ
அவளின் புகைப்படத்திற்கு
அருகில் மன்றாடி கொண்டு இருக்கிறது
அவள் இல்லாத வாழ்க்கையில்
எப்படி வாழ்வது என தெரியாமல்
எதை எதையோ சொல்லி
கூச்சலிட்டு அழுது மாண்டு
கொண்டு இருக்கிறது.
அவன் வானத்தில்
நிலவும் நட்சத்திரமும் மேகமும்
எல்லாமுமாக இருந்து
பிரகாசித்த அவள்
இனி இல்லை
இனி ஒரு நட்சத்திரமாக கூட
யாரும் வர போவது இல்லை
காலத்தின் சூழ்ச்சியில்
யாரேனும் வந்தாலும்
அவள் தந்த காதல் ஸ்பரிசம்
யாரும் தர இயலாது தான்
அவள் தினமும்
நட்சத்திரமாக நகர்ந்து கொண்டு இருக்கிறாள்
அவனை விட்டு தொலைதூரம்
அவன் வானத்தை வெறுமையாக
மாற்ற விருப்பம் இல்லாமல்
நகர்ந்து கொண்டு இருக்கிறாள்.
நட்சத்திரம் நகர்கிறது.
- மகிழினி
0 கருத்துக்கள்: