• என் அறை

    என் அறை 
    என் சௌகரிய வட்டம்

    என் அறை விசாலமாக இருக்கும்
    ஒரு ஓரமாய் ஒரு மெத்தை 
    ஒரு ஓரமாய் ஒரு மேசை 
    ஒரு ஓரமாய் ஒரு அலமாரி 
    ஒரு ஓரமாய் ஒரு புத்தக அலமாரி
    சாம்பல் நிற சுவரின் வண்ணம்
    நீல விளக்கின் ஒளி 
    அமைதியை தரும் 

    இரண்டு சன்னல்கள்
    ஒன்றின் வழியே காற்று வந்து 
    மற்றொன்றின் வழியே 
    நலம் விசாரித்து செல்லும்.

    என் அறையில் 
    எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கும் 
    இசை யார் காதுகளுக்கும் கேட்பதில்லை 
    என் அறையில் வாசிக்கப்படும் 
    புத்தகங்களின் சத்தம் யாருக்கும் கேட்பதில்லை.

    என் அறையில் 
    என்னுடனான உரையாடலை
    யாரும் ஒட்டு கேட்பது இல்லை.

    என் அறையில் 
    எனக்கு இருக்கும் சுதந்திரம் 
    ஆடைகள் அற்றது,
    நிர்வாணம் என் அறையின் 
    கண்ணாடிகளை பயமுறுத்தியது இல்லை
    என் அந்தரங்க ரகசியங்களை 
    மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது.

    என் அறையில் என் எண்ணங்கள் 
    எழுத்தாக மாறும்போது அவை 
    சிலநேரம் மேசையில் இருக்கும்
    சில நேரம் அறையின் குப்பைத் 
    தொட்டியில் இருக்கும்  
    சில நேரம் பழைய புத்தகத்தின்
    இடையில்  எட்டு மடிப்பு மடிந்து ஒளிந்திருக்கும்.

    என் அறையின் உள்ளே 
    அனுமதிக்கப்படும் நபர்களுக்கு 
    கால அவகாசம் உண்டு 
    அதற்குள் வெளியேற வேண்டும் 
    இல்லை என்ற போது
    அடுத்த முறை அனுமதி மறுக்கப்படும்
    இரவில் முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டு இருக்கும்.


    என் அறை 
    சில நேரம் நீல வானம் போல் இருக்கும் 
    சில நேரம் யாருமற்ற கடற்கரை போல் இருக்கும் 
    சில நேரம் பறவைகள் நிறைந்த காடு  போல் இருக்கும்
    சில நேரம் மழை பார்க்காத மலை போல் இருக்கும் 
    சில நேரம் நீர் பாய்ச்சிய வயல் போல் இருக்கும் 
    சில நேரம் மயானத்தின்
    அமைதியை கொண்டு இருக்கும்.


    என் அறை
    என்  சௌகரிய வட்டம் 
    நான் நானாக இருப்பேன்.

    - மகிழினி


0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக