சிதைந்து போன கனவுகள்
சூழ்நிலைகள் சில நேரங்களில்
கனவுகளின் சிறகுகளை இறுக்கி பிடிக்கும்
பறக்க நினைக்கும் கனவுகள்
பாதை தெரியாமல் திரிவதும்
பாதைகள் முடக்கப்பட்டபோதும்
சிறகுகள் கட்டுபடுத்த போதும்
இறுதி மூச்சு வரை போராடி
சிறகடித்து பறக்க நினைத்தன.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில்
உயிர் நீத்துப் போன கனவு.
அதன் வலிகள்
இரவுகளை விழுங்கியது,
கண்ணீரை விழுங்கியது,
வார்த்தைகளை விழுங்கியது.
தூரம் சென்றாலும் துயரம் போல்
துரத்தியது.
எத்தனை ஆண்டுகள் கண்ட கனவு
எத்தனை இரவுகள் இன்பமாய் உறங்க வைத்த கனவு
எத்தனை பேரிடம் பேசி பேசி உயிராய் உணர்ந்த கனவு
எத்தனை நாள் பேசி பேசி மெருகு எத்திய கனவு
எத்தனை நாள் உழைப்பு அதை நிகழ்காலத்திற்கு மாற்ற
எத்தனை நாள் கனவு சிதைந்தது ஒரு நொடியில்
கருவில் இருந்த குழந்தை
உலகம் பார்க்க சில நாட்கள் முன்பு
இறந்து போனதின் வலி போல்
என் கனவுகள் சிதைந்த போது,
ஏனோ கடும் வெயிலில்
சுடும் நெருப்பில்
நின்று குளிர் காய்வது போல்
என் கனவுகள் சிதைந்த போது,
ஆழ்ந்த உறக்கத்தில் விழித்து
வெளிச்சம் தேடும் குழந்தை போல
என் கனவுகள் சிதைந்த போது
என்னை தேடினேன்.
மீண்டும் புதிதாய் கனவு காண
சக்தி இல்லை என்று சொன்னால்
நான் திராணியற்றவான்.
மீண்டும் புதிதாய் கனவு காண
ஒரு பயம் என்று சொன்னால்
நான் வாழ தெரியாதவன்.
மீண்டும் புதிதாய் கனவு காண
மனதயிரியம் இல்லை என்று சொன்னால்
நான் கோழை.
மீண்டும் காலத்தோடு பயணம் செய்ய
ஒரு புதிய கனவு வேண்டுமே.
மீண்டும் கனவு காண்பேன்
சிதைக்கும் சூழ்நிலைகள்
கடந்து...
0 கருத்துக்கள்: