• வேறு ஒரு கிரகத்தில் நான்

    வேறு ஒரு கிரகத்தில் நான்



    இங்கு வானம் நிறைய
    புகை கக்கும்
    தொழிற்சாலைகள் இல்லை.

    இங்கு காதுகள் கிழிக்கும்
    சத்தத்தோடு ஊர் எங்கும்
    சுற்றும் வாகனமும்  இல்லை.

    இங்கு எந்த மதமும்
    மதம் சார்ந்த பிரச்சாரமும்
    இல்லை.

    இங்கு அடிமைப்படுத்தும் சாதியும்
    அடிமையாய் இருக்கும் சாதியும்
    இல்லை.

    இங்கு நெகிழி என்ற ஒரு
    கொடிய  வேதியல்
    பொருளும் இல்லை.       

    இங்கு அறிவியல் என்றும்
    வளர்ச்சி என்றும்
    எதுவும் அழிக்கபடுவதும்
    இல்லை.

    ஏனெனில்
    இங்கு மனிதர்கள் என்ற
    மூட்ர்கூட்டமே இல்லை.

    வேறு ஒரு கிரகத்தில் நான்

    வெப்பத்தால் தீ பிடிக்காத
    காடுகளில்
    பல கோடி மரங்களின்
    சருகாக நான். 

    தடுப்புகள் இன்றி
    சுதந்திரமாய் கரைபுரண்டு
    கடலில் இணையும்
    நதியாக நான்.

    யாரையும் பழிக்காமல்
    சுயநலம் தவிர்த்து
    ஒரு மரத்தில்
    பல  கூடுகளில் வாழும்
    குருவியாக நான்.

    வேட்டையாடி உண்ணும் குணம்
    இல்லாது வாழும்,
    தந்திரங்கள் இல்லாத
    ஒரு நரியாக நான்.   

    காலை இளவெயிலில்
    உடையும் பனிதுளிகள்
    உடையாது தாங்கும்
    புற்களாக நான்.

    உருகாத பனிமலை
    உச்சியில் இருந்து
    உதித்து பனிகள் மீது தொட்டு
    உதிரும்  நிலவொளியாக  நான்.

    இறகை  வேகமாய்
    அசைத்து பறக்கும்
    வண்ணத்துப் பூச்சியை ரசிக்கும்
    எதிர் காற்றாக நான்.

    இயற்கை மட்டுமே
    வாழ்வென
    மேகங்கள் மத்தியில்
    தேய்பிறையாய் வளர்பிறையாய்
    நிலவின் அருகில்
    தோன்றும்  விண்மீன்களாக நான்.

    வேறு ஒரு கிரகத்தில் நான்.

    -மகிழினி 

0 கருத்துக்கள்:

கருத்துரையிடுக